தமிழ்நாடு அரசியலும் ‘புலி’ப்பார்வையும்!

cropped-20190207_101655-2.jpgதமிழீழ விடுதலைப் புலிகளை நேசிப்போர், தமிழீழ விடுதலையினை அதிதீவிரமாக ஆதரிப்போர் அனைவரும் 2009ற்குப் பின் தமிழ்நாடு சார்ந்த அரசியல் பார்வையில் புலிகள் எதனை கையாண்டார்கள் என்பதனை கற்க மறந்துவிட்டனர் என்றே எண்ணத் தோன்றுகிறது.

80களின் முற்பகுதி வரை, கொரில்லாப் போரில் நின்றவர்களுக்கு தமிழகம் தங்கள் இல்லம்…எப்பொழுதும் வரலாம், எப்பொழுதும் செல்லலாம்..முக்கியக் கட்சிகளின் செல்லப்பிள்ளைகள்….தமிழ்நாடு ‘அரசின்’ அன்புப் பிள்ளைகள். திராவிடர் கழகத்தின் பெரியார் திடல் அஞ்சல் முகவரி என வலம் வந்தார்கள்…

இந்திய அரசின் அதிஉட்சத் தலையீடு, குறுக்கீடு, தவறான வழிகாட்டல், கொள்கைகளற்ற வெளியுறவுப் பாதை, அதன் வழி தமிழ்நாட்டினைக் கையாளுதல், தமிழ்நாட்டைப் புறக்கணித்துவிட்டு தமிழீழ அரசியலை தன் கைப்பாவைக்கிக் கொள்ளத் துடித்தல் போன்ற நிகழ்வுகள் ஒருபுறம் நடந்தேற, மறுபுறம் மரபுவழி இராணுவம், தமிழீழத் தேசத்தினை கட்டியமைத்தல் என்பதில் கவனம் செலுத்திய தமிழீழ விடுதலைப் புலிகள் இந்திய அரசின் ஆதிக்கத்தின்்/அதிகாரத்தின் வழி தமிழ்நாடு அரசின் எல்லையை உணர்ந்துக்கொண்டார்கள்.

அதேவேளை, தமிழ்நாட்டின் மீதான பார்வையை இருவழிகளில் பார்த்துவந்துள்ளனர்.

ஒன்று, இலங்கைத் தீவினில் சிங்களத் தேசமும் தமிழீழத் தேசமும் இருவேறாக இருப்பது போல, இந்திய ஒன்றியத்தின்/இந்தியத் துணைக்கண்டத்தின் கூட்டுத் தேசங்களில் ஒன்று தமிழ்நாடு என்னும் தேசம். அதேவேளை, அதன் அதிகார எல்லை, வரையறை, தனக்கான உரிமைப் போராட்டம் இரண்டுமே இரண்டு தமிழ்த் தேசங்களும் அவரவர் வழிமுறைகளில் நின்று பார்ப்பதும் அவரவருக்கு உரிய ஒத்துழைப்புகளோடும் அணுகவதும் அவசியம்.

இரண்டாவது, தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் வழியாக தங்களுக்கான ஆதரவாளர்களை வைத்திருப்பதும், அவர்கள் வழி இந்திய ஒன்றிய ஆட்சியாளர்களுடன் தேவைகளின் பொழுது பேசுவதுமானது. 1996-2001 காலங்களில் தமிழகம் வழி நடந்த நன்மைகளும் உண்டு.

தமிழ்நாட்டின் இறையாண்மையை மதித்தல் என்பது, தமிழ்நாட்டின் அரசியல் நிலைப்பாடுகளில் தலையிடாமல் இருப்பதுமாக தீர்க்கமாக இருந்தார்கள். தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளும் புலிகள் எப்பொழுது யாரோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், எப்படி பேச வேண்டும், எப்பொழுது போர் செய்ய வேண்டும், எப்பொழுது சர்வதேச தலையீட்டைக் கொண்டு வரவேண்டும் என்று சொல்லவும் இல்லை, சொல்லவும் முடியாது. அப்படி சொல்வது தமிழீழத்தின் இறையாண்மையில் தலையிடுவதாகிவிடும்.

தமிழீழ விடுதலையின் பலமும், தமிழ்நாட்டு அரசியலின் பலமும் இருத் தேசங்களும் அவரவர் இறையாண்மையை மதிப்பதிலும், இயன்ற அளவிற்கான உதவியாக இருத்தலும் மிக அவசியம் என்பதை தமிழீழ விடுதலைப் புலிகள் தீர்க்கமாக தங்கள் செயற்பாடுகள் வழி உணர்த்தியுள்ளனர்.

அதனால் தான், ராஜீவ் படுகொலைக்குப் பிறகு, தமிழீழ விடுதலைப் புலிகள் தடை முதல் பல்வேறு எதிர் வேலைகளைச் செய்த ஜெயலலிதா அம்மையாரோடு 1998 நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலைப் புலிகளின் தீவிர நண்பராக விளங்கிய மதிமுகவின் கூட்டணியை, தமிழீழ விடுதலைப் புலிகள் எதிர்க்கவில்லை. 1996-2001 காலக்கட்டத்தின் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பலமான இராணுவ, அரசியல் வேலைகளையும் தமிழ்நாட்டு அரசியல் சூழலையும் ஒப்பிடாமல் ஆய்வுச் செய்ய முடியாது.

1998இல் பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்ததும், அம்மையார் ஜெயலலிதா உருவாக்கிய நெருக்கடியே, “தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் திமுக அரசாங்கத்தை கலைத்தாக வேண்டும்” என்பதே!

அதனை மறுத்ததாலேயே, பாஜகவிற்கான தனது ஆதரவினை விலக்கி, பாஜக அரசாங்கத்தைக் கவிழ்த்தார் ஜெயலலிதா. அதன் பின் உருவான, மதிமுக, திமுக கூட்டணியிலான பாஜக அரசாங்கத்தின் வழி முரசொலி மாறன் அவர்களும் வைகோ அவர்களும் செய்த சில உதவிகளை அறிந்தோர், துணை நின்றோர் இன்னும் தமிழகத்தில் இருக்கிறார்கள். திராவிட இயக்கத்தில் இருக்கிறார்கள்..பாஜகவின் வெளியுறவுக் கொள்கையில் யஷ்வந்த் சிங்க் ஜஸ்வந்த் சிங்க் பொறுத்து தடுமாறி, லக்ஷ்மண் கதிர்காமரின் தொடர் உறவுகளுக்கு பின் மீண்டும் சறுக்கி இலங்கைக்கு சார்பானது வேறு கதை.

அதேவேளை தமிழீழ விடுதலிப்புலிகள், இந்திய மைய அரசாங்கக் கூட்டிலும், தமிழ்நாட்டில் தீவிரமாக தங்களை எதிர்த்த ஜெயலலிதா அம்மையார் கூட்டணியிலுமே கூட தங்கள் ஆதரவுக் கட்சிகள் இருந்ததை வரவேற்றார்கள், இருப்பதை உறுதிச்செய்துக்கொண்டார்கள், பயன்படுத்தியும் கொண்டார்கள், என்பதனையும் குறைந்ததேனும், அவர்களின் இராஜதந்திரப் பார்வையாகக் கூட இதனை விளங்கிக்கொள்ளலாம்.

தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்தோர் எல்லோரையும், வைகோ ஐயா, நெடுமாறன் ஐயா, சு.ப.வீ ஐயா என வரிசையாக பொடாவில் கைது செய்தார் ஜெயலலிதா அம்மையார். அதன் பின் கூட, வைகோ ஐயாவினது மதிமுக-அதிமுக கூட்டணியை, அதில் அங்கம் வகித்த விடுதலைச்சிறுத்தைகளை புலிகள் விமர்சிக்கவில்லை, மாறாக, தங்கள் ஆதரவாளர்கள் அங்கும் இருப்பது மட்டுமே சரியென்றே தொடர்ந்து உறவைப் பேணினார்கள்.

2007இல் தமிழ்நாடு அரசின் செய்தித்தொடர்புத் துறை வழியாக, அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர், தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவருக்கு வெளியிட்ட இரங்கற்பா கண்டு, கடுமையாக கொதித்தெழுந்துத் தூற்றியவர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதற்காகவே திமுக ஆட்சி கலைக்கப்படவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியவரும் அவரே.

geneva_talks_01_51167_435போரின் நெருக்கடிக் காலங்களில் பேசிய தமிழீழ விடுதலைப் புலிகள், திமுக-காங்கிரஸ் கூட்டணியில் தொடர்வது தொடர்பாக எதிர்மறை கருத்தை வெளியிடவில்லை என்பதனையும் தொல். திருமாவளவன் அவர்கள் பலமுறை எடுத்துக் கூறியுள்ளார்.

திமுகவின் கூட்டணியில் இருந்த தொல் திருமாவளவன் அண்ணனோடும், சு.ப. வீ ஐயாவோடும் தமிழீழ விடுதலைப் புலிகள் யாரும் பகைக்காட்டி வெட்டவில்லை.

1991-2009 வரை தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழ்நாடு அரசு மற்றும் அரசியல் கட்சிகளை தமிழீழ விடுதலைக்கான ஆதரவாளர்கள், உறவாகப் பார்த்தார்களேத் தவிர, தங்களின் ஆலோசகர்களாகவும் பார்க்கவில்லை, தங்களுக்கான அரசியல்வாதிகளாக மட்டும் பார்க்கவில்லை. அவரவர் தளத்தில், அவரவர் சூழலில் எங்கு இருந்தாலும், ‘தங்களின்’ ஆளாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே எல்லையாக வரையறுத்துக்கொண்டார்கள்.

2011இல் குமுதத்தில் சீமான் அண்ணனின் கட்டுரை. இருப்பாய்த் தமிழா நெருப்பாய்…அதில் சீமான் அண்ணனிடம் 2009 போரின் உச்சக்கட்டத்தில் நின்றுக்கொண்டு பேசிய தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்படைத் தளபதி சூசை, “எம்மைப் பற்றி விசனப்பட வேண்டாம். தேர்தல் பரப்புரையின் பொழுது அம்மையார் சோனியாவையோ, கலைஞரையோ விமர்சிக்காதீர்கள். அது தவறு. நம் சோகங்களை சொன்னால் போதும். கவனம்” என்று கூறியுள்ளதாக சீமான் அண்ணனே எழுதியுள்ளார்…..

2009ற்கு முன்பு, தமிழீழ விடுதலைப் புலிகளை தமிழ்நாட்டில் இருந்து மதித்தோர், வேலை செய்தோர், பல இன்னல்களை சந்தித்தோர், பல தியாகங்களை புரிந்தோர் அனைவரும் 2009ற்கு பின்னர் துரோகிகளாக்கப்பட்டு வருகின்றனர். இது, தமிழீழ விடுதலைப் புலிகளின் பார்வைக்கு எதிராக, இராஜதந்திர அரசியலுக்கு எதிரான உணர்ச்சிக் குவியல் அரசியலுக்கானது மட்டுமே.

அரசியலுக்கு எல்லாம் அப்பாற்பட்டு, இதேவேளையில் இன்னொன்றைச் சொல்லியாக வேண்டும். 2015இல் கொளத்தூர் மணி அண்ணனோடு பேசிக்கொண்டிருந்த பொழுது, “சிறுது காலம் முன்னர் ஈழத்தில் இருந்து வந்தோர் சிலருக்கான மருத்துவச் சிகிச்சைக்கும், இன்னபிறவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, வாழ்வாதாரத் தேவைகளுக்கும் தன் சொத்து ஒன்றை வித்து பல லட்சங்கள் கொடுத்ததாகக் கூறினார்.

அண்ணே, “போராளி என்று பொய்ச் சொல்லிக் கொண்டு நிறையப் பேர் இங்கு வந்து செல்கின்றனர். எல்லோருக்கும் உண்மை, பொய் தெரியாமல் செய்துவிடுவது சரியா” என்றுக் கேட்டேன். அதற்கு அவர் சிரித்துக் கொண்டே, “விஜய், உதவி என்று வந்தோர் ஈழத்தமிழர்கள். அதில் சந்தேகம் இல்லை. அவர்களின் உடல் பிரச்சனை அனைத்தும் போரினால் உண்டானவை அதிலும் சந்தேகம் இல்லை. போராளி என்று பொய்க்கூடச் சொல்லிவிட்டுப் போகட்டுமே. போரில் பாதித்தத் தமிழனுக்கு உதவிச் செய்ய எதற்கு யோசிக்கணும். நம்மால் முடிந்தால் செய்கிறோம். இல்லையேல், பிறரைச் செய்யச் சொல்லிக் கேட்கிறோம். இயன்றவரைச் செய்வோம்” என்றார்.

அண்ணன் வேல்முருகன் 2014-2015 நிறைய எடுத்துக்கூறியும் ஈழம் என்பதற்காக தமிழ்நாடு வந்தோருக்கு செய்தவை ஏராளம். மதிமுகவின் கடைமட்டத் தொண்டன் கூட ஈழத்திற்காக 2009ற்கு முன்னரும் பின்னரும் நிறைய இழந்திருக்கிறான்.

விடுதலைப் புலிகளுக்காக செய்த தியாகம், சிறை, வழக்கு இதையெல்லாம் செய்துவிட்டு இன்னும் அமைதியாக ஒரு விரக்திச் சிரிப்போடு திரியும் விடுதலைச் சிறுத்தைகளின் தொண்டனிடம் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லை.

கோவை இராமகிருட்டிணன் ஐயாவின் தோழர்களும் மதிமுகவின் தொண்டர்களும் கோவையில் இந்திய இராணுவத்தை இடைமறித்து அடித்த வழக்கினால் என்ன சிரமத்தில் இருக்கிறார்கள் என்பது யாருக்குமே தெரியாது. இன்றுகூட, திராவிட இயக்கத் தமிழர் பேரவை துணைப் பொதுச்செயலாளர் சிங்கராயர் அண்ணனோடு நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தபொழுது, தமிழீழ விடுதலைக் களத்தினை தமிழ்நாட்டில் மெல்ல மெல்ல இழந்துவருகிறோம், விஜய். எல்லாம் கைமீறிப் போய்க்கொண்டிருக்கிறது, ஆனால், நாம் தொடர்ந்து இயங்குவோம். நம் வாழ்நாளின் இறுதி வரை தமிழீழ விடுதலைக்கான ஏதோ ஒரு சின்ன வேலையையாவது செய்துக்கொண்டிருப்போம். நாம் வாழ்ந்ததற்கான அர்த்தம் அதுதான் என்றார்.

இது எதுவுமே நான் சொல்லி தமிழீழ மக்களுக்கு புதிதாகத் தெரியவேண்டியதில்லை. 2009ற்கு பின் தடம்மாறியோர் மட்டும் சிந்திக்க வேண்டுகிறேன்.

ஒரு தமிழ்நாட்டுத் தமிழராக மேலே குறிப்பிட்ட யாரும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்காகவும் தமிழீழ விடுதலைக்காகவும் கொட்டிய உழைப்பிற்காக இன்று வரை எதனையும் எதிர்ப்பார்க்கவுமில்லை, இழந்தவைகளுக்கு ஈடும் கேட்கவில்லை, ‘தமிழீழ மாமனிதர்’ பட்டமும் கேட்கவில்லை. இவ்வளவு ஏன் இதனையெல்லாம் சொல்லிக்காட்டுவதுக் கூட ‘அறமாகப்’ பார்க்கவில்லை.

இவர்களைத்தான் அறிவாலாயக் காவல்காரர்கள், திமுகவின் ஓசிச்சோறு, திருட்டுத் திராவிடம் என்று வசைபாடுகின்றனர் சில ஈழத்தமிழர்கள்.

ஈழத்தமிழர்களோடும், ஈழத்தமிழர் அரசியல்வாதிகள், ஈழத்தமிழ் அமைப்புகளோடு நெருங்கிப்பழகுபவன் என்ற முறையில், சிலர் தான் இப்படி தடம் மாறி வசைப்பாடுவது என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். பெரும்பாலுமானோர் தமிழ்நாட்டு அரசியலை ;புலி;ப்பார்வையில் தான் இன்றும் பார்த்து வருகின்றனர்…

திராவிட இயக்கத்துக்காரனான என்னைத்தான் 2009ற்கு பிறகு நோர்வே மக்கள், நோர்வே ஈழத்தமிழர் அவை தேர்தலில் வெற்றி பெற வைத்து பிரதிநிதி ஆக்கினர். ஈழத்தமிழர் அவையின் ஊடகப்பேச்சாளராக இருந்தேன். சர்வதேச அரசியல் மற்றும் இந்திய அரசியல் நகர்வுகளில் எனக்கு முக்கியத்துவம் அளித்தனர். நோர்வேயின் ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல, ஐரோப்பாவெங்கும் எந்த ஊருக்குச் சென்றாலும், எந்த நாட்டிற்குச் சென்றாலும், என்னை தங்கள் வீட்டுப் பிள்ளையாகப் பார்க்கும் ஈழத்தமிழ் குடும்பங்கள் இருக்கிறது. உறவுகள் இருக்கிறது. சென்ற வருடம் ஈழத்திற்குச் சென்றபொழுது ஈழத்தமிழர் அரசியவாதிகள் பலரது இல்லத்தில் அன்போடும் பாசத்தோடும் உணவளித்தனர். என்னை அப்படித தாங்கித் தாங்கிப் பார்த்துக்கொண்டனர். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணமும் யாழ்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு குழந்தை போல பார்த்துப் பார்த்து பயணத்தை இனிமையாக்கினர்.

2007இல் என் நேசத்துக்குரிய தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர் தமிழ்ச்செல்வன் அண்ணா கொல்லப்பட்ட நொடியில் இருந்து என் புனைப்பெயர் தமிழ்ச்செல்வன். என் இணையம் , என் கட்டுரை, என் புத்தகங்கள் அனைத்தும் ‘தமிழ்ச்செல்வன்’ என்ற பெயரில் தான் வெளிவந்தது…

அன்றும் நான் திராவிட இயக்கத்துக்காரன் தான், இன்றும் நான் திராவிட இயக்கத்துக்காரன் தான். நாளையும் நான் திராவிட இயக்கத்துக்காரன் தான்.

அன்றும் தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழ விடுதலைக்கான அரசியலை செய்தவன், இன்றும் செய்கிறேன். நாளையும் செய்வேன்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s