ஃபின்லாந்தின் ‘பெண்களின்’ அரசாங்கமும் சுவீடனின் ‘பெண்ணிய’ அரசாங்கமும்

(சென்னை சோகா இகேதா கல்லூரியின் ஆங்கிலத் துறையும் தமிழ்த்துறையும் இணைந்து மார்ச் 7, 2020 அன்று நடத்திய ‘புதிய பாதையில் பெண்கள்’ என்னும் தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கத்திற்காக எழுதப்பட்டக் கட்டுரை)

சில மாதங்களுக்கு முன்பு இளைய வயது (34 வயது) ஃபின்லாந்து பெண் சன்னா மரினா அந்நாட்டின் பிரதமர் ஆனது, அரசாங்கத்தின் அமைச்சரவை பெரும்பாலுமான இளையப் பெண்களால் கட்டியமைக்கப்பட்டச் செய்தி, கூட்டணி அரசாங்கத்தின் 5 கட்சிகளும் பெண்களின் தலைமை கொண்டது, அதிலும் 35 வயதிற்குள்ளான தலைவிகள் என வியக்கவைக்கும் பல செய்திகள் ஒரே நேரத்தில் வெளிவந்து நம்மையெல்லாம் திக்குமுக்காட வைத்திருக்கும்.

நோர்வே, சுவீடன், ஃபின்லாந்து, டென்மார்க், ஐசுலாந்து உள்ளிட்ட நோர்டிக் நாடுகளில் வாழ்பவர்கள் இந்நாடுகளின் வேலையிடங்கள், சமூகக் கட்டமைப்பில் ஆண்-பெண் சமத்துவத் தன்மையினை நேரடியாக உணர்ந்திருக்கலாம். இன்னும் ஒருபடி மேலே சொல்ல வேண்டுமானால், ஐரோப்பிய அமெரிக்க நாடுகளைக் காட்டிலும் நோர்டிக் நாட்டுப் பெண்கள் ‘ஆளுமை’ மிக்கவர்கள் என்ற பார்வையும் உண்டு.

இந்நாடுகளின் மொழி, இன, வரலாற்றில் பொதுத்தன்மை உண்டு. நோர்வே டென்மார்க் நாட்டின் கட்டுப்பாட்டில் 400 வருடங்களுக்கு மேலாகவும், சுவீடனின் கட்டுப்பாட்டில் 100 ஆண்டுகளுக்கும் இருந்தது. ஃபின்லாந்து சுவீடனின் கட்டுப்பாட்டில் 600 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்திருப்பினும் தனித்த ஆட்சி அதிகாரத்தைப் பெற்ற ஆண்டுகளில் இருந்தே கல்வி, சமூகக் கட்டமைப்பு, அரசியலில் என தத்தமது தனித்தன்மையினை நிலைநாட்டுவதில் இவர்கள் அனைவருமே ‘விடாப்பிடியான’ செயற்பாடுகளில் இறங்கினர் எனலாம்.

தாய்மொழிக் கல்வி, ஆண்-பெண் சமத்துவம், ஏற்றத் தாழ்வற்ற பொருளாதார நிலை அடைதலின் தொடர் செயற்பாடுகள், மனித உரிமை கோட்பாடுகள் என உலகின் வழிகாட்டியாய் இந்நாடுகள் இன்றும் மெருகேறிக்கொண்டேச் செல்கின்றன எனலாம்.

ஆண்-பெண் சமத்துவ நிலையினை சமூக அளவில் மட்டுமின்றி ஆட்சி அதிகார, கொள்கை வடிவமைப்பு, சமூகத் தலைமை என எல்லாத் தளங்களிலும் நிலைநிறுத்தி வருவதன் தொடர்ச்சியே ஃபின்லாந்தின் ‘பெண்களின்’ அமைச்சரவை.

ஃபின்லாந்தின் பெண்ணிய ’அதிகார’ வரலாறு:

இன்றைய ஃபின்லாந்து நிலப்பரப்பு கிட்டத்தட்ட 600 ஆண்டுகள் சுவீடனின் கட்டுப்பாட்டில் இருந்துவிட்டு 1809இல் ருசியாவின் கீழான ஆனால் முழுமையான தன்னாட்சிப் பெற்ற நாடாகத் தொடர்ந்தது. தன் முழுமையான தன்னாட்சியில் ஃபின்லாந்து மேற்கொண்ட புரட்சிகரமான சட்டத்திட்டங்களில் ஒன்றுதான் 1863இல் நகராட்சியிலும் அதனைத் தொடர்ந்து 1872இல் மாநகரங்களிலும் பெண்களுக்கான ஓட்டுரிமை.

(1838இல் பிட்கேய்ர்ன் தீவுகளும், 1840இல் சட்டம் இயற்றப்பட்டு, 1852இல் நடைமுறைப்படுத்தப்பட்ட ஹவாய்த் தீவுகளிலும் 1893இல் நியூசிலாந்திலும் 1913இல் நோர்வேயிலும் 1915 இல் டென்மார்கிலும் 1947இல் இந்திய ஒன்றியத்திலும் தேசிய அளவிலான அனைத்துப் பகுதிகளிலுமான பெண்களுக்கான ஓட்டுரிமையை முதன்முதலில் வழங்கப்பட்டது வரலாறு).

1906இல் ஐரோப்பியாவில் முதன் முதலாக அனைத்துப் பகுதிகளிலும் ஆண்-பெண் இருபாலருக்குமான ஓட்டுரிமை மற்றும் தேர்தலில் நிற்கும் சம உரிமையினை ஃபின்லாந்து உருவாக்கியது. அடுத்த ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் 19 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்று உலகின் முதலிடத்தை இதிலும் பெற்றுக் கொண்டது. 1926லேயே முதல் பெண் அமைச்சராக மீனா சீலன்ஃபா (Miina Sillanpää) உருவானார். 2000ம் ஆண்டில் டார்ஜா ஹாலேன் முதல் பெண் ஜனாதிபதியாகவும் 2003இல் அன்னெலி யாட்டின்மகி (Anneli Jäätteenmäki) முதல் பெண் பிரதமராகவும் ஆனர். 2007இல் மாட்டி வான்ஹனன் (Matti Vanhanen) அமைக்கப்பட்ட அமைச்சரவையில் 12 பெண்களும் 8 ஆண்களும் அங்கம் வகித்து, ஆண்களை விட பெண்கள் அதிகம் இடம்பெறும் அமைச்சரவை அமைத்த நாட்டின் பெருமையினையும் ஃபின்லாந்து தட்டிச்சென்றது.

சன்னா மரினா அமைச்சரவை 2019:

ஃபின்லாந்தின் 2019 அமைச்சரவை
ஃபின்லாந்தின் 2019 அமைச்சரவை

2019 டிசம்பரில் 34 வயதான பெண் சன்னா மரினா பிரதமரானதும் இன்னும் பல வரலாற்றுப் பெருமைகளை ஃபின்லாந்து பெற்றது. ஒட்டுமொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் 47% பெண்கள்.

உலகின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் இள வயது பெண் என்பது அதன் மகுடம். சன்னா மரினாவின் அமைச்சரவையில் 19 அமைச்சர்களில் 12 பெண்கள் அதிலும் 40 வயதிற்குக் குறைவானோர் என்பது நவீன உலகில் வியக்க வைக்கும் சாதனைதான். சன்னா மரினா அமைச்சரவை கூட்டணியால் உருவானது. பசுமைக் கட்சி, இடதுசாரி முன்னணி, சுவீடன் மக்கள் கட்சி, மைய்யக் கட்சி என அனைத்துமே பெண்களின் தலைமை வகிக்கும் கட்சிகள் என்பதுதான் அதன் அடுத்த சிறப்பு. மேலும், இந்த ஐந்து கட்சிகளையும் தலைமைப் பொறுப்பில் இருக்கும் மூவர் 35 வயதிற்குக் குறைவானோர்.

https://www.theguardian.com/world/2019/dec/14/feminism-finland-gender-equaity-sanna-marin

 சுவீடனின் பெண்ணிய அரசாங்கம்:

சுவீடனின் பெண்ணிய அரசாங்கம்
சுவீடனின் பெண்ணிய அரசாங்கம்

சுவீடன் நாட்டில் 2005இல் புதியக் கட்சியாக பெண்ணியக் கட்சி உருவாகி 2014 தேர்தலில் 4% வாக்குகளைப் பெற்றதன் அடிப்படையில் முதன் முதலில் நாடாளுமன்றத்திற்குள் தன் பிரதிநிதியை அனுப்பியது. உலகின் முதன் முதலில் இடதுசாரித் தன்மையுள்ள, இனப்பாகுபாடுகளுக்கு எதிரானக் கொள்கைகளைக் கொண்ட பெண்ணியக் கட்சி நாடாளுமன்றத்திற்குள் அனுப்பதில் சுவீடன் தன் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியது. அதே ஆண்டு, சுவீடன் அரசாங்கம் தான் உலகின் முதல் பெண்ணிய அரசாங்கம் என தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்டது. அதாவது, தேசிய, சர்வதேசிய கொள்கை வகுப்பு, செயற்முறை, அரசாங்க நடைமுறை, அமைச்சரவை என அனைத்திலும் ஆண்-பெண் சமத்துவத்தை நிலைநிறுத்துவதில் உறுதிப்பூண்டுள்ளது.

சுவீடன் அரசாங்க அதிகாரப்பூர்வ இணையத்தில் இதனைக் காண்லாம். https://www.government.se/government-policy/a-feminist-government/

2014இல் சுவீடனின் அயலகத்துறை அமைச்சரான மார்கோட் வால்ஸ்ற்றோம் (பெண்) தான் அயலகக் கொள்கை வடிவமைப்பில் பெண்களின் சமத்துவப் பங்களிப்பை உறுதிச் செய்யும் நடைமுறைக்கு வழிகோலிட்டார்.  https://www.nytimes.com/2019/03/08/world/europe/international-womens-day-feminism.html

2019இல் நடந்த தேர்தலில் 349 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 161 பெண் உறுப்பினர்கள் பெற்று ஐரோப்பியாவில் அதிக எண்ணிக்கைக் கொண்ட நாடு என்ற பெருமையும் சேர்த்துப் பெற்று இருக்கிறது. இத்தனை பெருமைகள் இருந்தபொழுதிலும் சுவீடனில் இதுவரை பெண் பிரதமர் உருவாகவில்லை என்பது வியப்பிற்குரிய விமர்சனமாக தொடர்கிறது.

நோர்டிக் நாடுகளின் பெண் தலைமை:

நோர்டிக் நாடுகளில் சுவீடன், ஃபின்லாந்து, நோர்வே அரசியல் தலைமை கொண்டப் பட்டியலில் முன்னணியிலும் டென்மார்க் மற்றும் ஐசுலாந்து பின்தங்கியும் உள்ளன.

முதல் பிரதமர் பட்டியலைப் பார்த்தால் நோர்வே நாட்டின் குரூ ஆர்லாம் (Gro Harlem Brundtland) 1981லும் ஃபின்லாந்து நாட்டின் அன்னெலி யாட்டின்மகி (Anneli Jäätteenmäki) 2003லும் ஐசுலாந்து நாட்டின் யோகன்னா சிகுரோர்டோட்டிற் (Jóhanna Sigurðardóttir) 2009லும் டென்மார்க் நாட்டின் ஹெல்லே தோர்னிங்க் (Helle Thorning-Schmidt) 2011லும் இடம்பெற்றுள்ளனர்.

ஐசுலாந்தின் யோகன்னா தான் உலகின் முதல் LGBTஐ ஏற்றுக்கொண்டு வாழும் முதல் தலைவர். ஃபின்லாந்தின் சன்னா மரினாவினை வளர்த்தவர்கள் தன்பாலின இணையர்.

ஐரோப்பியமயமாதல்:

1994இல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான பொதுமக்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டப் பொழுது, நோர்வே நாட்டில் நிலைப்பெற்றிருக்கும் ஆண்-பெண் சமத்துவச் சட்டங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதால் கெட்டுவிடுமோ? என நோர்வே நாட்டு ஆண்களும் பெண்களும் விவாதித்ததாக, Europeisering av nordisk likestillingspolitikk (‘Europeanisation of Nordic gender equality policies’) என்னும் புத்தகத்தை எழுதிய காதெரின் ஓல்ஸ்ட் குறிப்பிட்டுள்ளார். இவர் ஓஸ்லோ பல்கலைக்கழகத்தின் சமுதாயவியல் துறை பேராசிரியர்.

நோர்வே தவிர்த்த ஏனைய நோர்டிக் நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இணைந்திருப்பினும் ஆண்-பெண் சமத்துவக் கோட்பாட்டில் தங்கள் நாட்டிற்கென நிலைத்திருக்கும் தனித்துவச் சட்டங்களை சமரசம் செய்துக்கொண்டதில்லை என்றும் விவாதங்கள் இன்றும் வந்துப் போகின்றன.

பள்ளிக்கூடங்களில் தொடங்குகிறது:

நோர்டிக் நாடுகளில் வேலை வாய்ப்புகள், கொள்கை முடிவுகள், அரசியல் அதிகார மையம், ஊதியம், குழந்தைப் பிறப்பின் பின்னரான தாய்-தந்தைக்கான பகிர்ந்தளிக்கப்பட்ட விடுமுறை நாட்கள் என பல கொள்கைகள் செழுமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இவையெல்லாவற்றிற்கும் முன்னோடியாக, ஆண்-பெண் சமத்துவத்தை பள்ளிக் கல்வியிலேயே தொடங்கிவிடுகிறார்கள்.

பள்ளியில் எவரையும் ஆண், பெண் என சொல்வதில்லை, பெரும்பாலும் நண்பர்கள், வகுப்புத் தோழமை இப்படி பொதுவானச் சொல்லிலேயே அழைக்கப்பழகியுள்ளனர். விளையாட்டுகளில் ஆண், பெண் என தனியாக குழுச் சேர்வதை பெரும்பாலுமான தருணங்களில் அனுமதிப்பதில்லை. ஆண்கள், பெண்கள் என அவரவருக்கு இதுதான் விளையாட்டு என வகைப்படுத்தி வைப்பதில்லை.

சமூகம், கல்வி, வேலை இடங்களில் ஆண்-பெண் சமத்துவத்தை நிலைநாட்டி உறுதிச் செய்யவும், இன்னும் பலக் கட்டங்களில் மேம்படுத்தவும் நோர்டிக் நாடுகள் ஐந்தும் இணைந்து பாலின சமத்துவத் திட்டங்களை 2015இல் உருவாக்கி, தங்கள் தொடர் செயற்பாடுகள் மூலம் அடுத்தக் கட்டப்பாய்ச்சலுக்குத் தயாராகி வருகின்றனர்.

தொடர்புடைய கட்டுரைகள்:

1) சூரியனே தென்படா நிலத்தில்! வெண்பனி படர்ந்த கடும் குளிரில்! (நோர்வே, சுவீடன் ஃபின்லாந்து பயணம்)

2) உலகை அச்சுறுத்தும் வெப்ப அலை – எதை நோக்கி செல்கிறது நவீன உலகம்?

3) மரபுசாரா எரிசக்தி கொள்கை – ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கூட்டு நடவடிக்கை என்னென்ன?

4) சுவீடன் பல்கலைக்கழகங்களில் உயர்நிலைப் படிப்பிற்கான வழிகாட்டல்

5) போக்குவரத்துகளில் மரபுசாரா எரிசக்தி – உலகிற்கு வழிகாட்டும் நோர்வே

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s