மரபுசாரா எரிசக்தி கொள்கை – ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கூட்டு நடவடிக்கை என்னென்ன?

காலநிலை மாற்றத்தினை எதிர்கொள்ளும் பல்வேறு நடவடிக்கைகளில் ஒன்றாக, மின்சாரம் மற்றும் போக்குவரத்திற்கு பயன்பட்டு வரும் படிம எரிவாயுக்களில் இருந்து மரபுசாரா ஆற்றலினை நோக்கின செயல்திட்டங்களை பல்வேறு நாடுகளும் உருவாக்கி வைத்திருக்கின்றன. அவைகள் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம்.

மரபுசாரா ஆற்றல் உருவாக்கும் மூலங்களில் சூரியக்கதிர், காற்றாலை, நீராற்றல், அலைவீச்சு, புவிவெப்பசக்தி, உயிரி எரிசக்தி ஆகியவைகள் உள்ளடக்கம்.

ஐரோப்பிய நிலவரங்கள் என்ன?:

2050ற்குள் காலநிலை பொதுமை அடையும் முதல் கண்டமாக (climate neutral continent) ஐரோப்பிய கண்டம் இருக்க வேண்டும் என்ற இலக்கினை வைத்தே ஐரோப்பிய பசுமை செயலாக்க வரைவினை ஐரோப்பிய நாடுகள் உருவாக்கிப் பணியாற்றி வருகின்றன.

https://ec.europa.eu/eurostat/statistics-explained/index.php/Renewable_energy_statistics#Consumption_of_renewable_energy_more_than_doubled_between_2004_and_2018

2020ற்குள் ஐரோப்பிய நாடுகளின் ஆற்றல் பயன்பாட்டில் மரபுசாரா எரிசக்தி மூலமான ஆற்றல் பயன்பாடு, கூட்டு சராசரி அளவாக 20% இருத்தல் வேண்டுமென கொள்கை நடைமுறையில் உள்ளது. 2004 இல் 8.5% கூட்டு சராசரி அளவும் 2018இல் 18% அளவாகவும் இருந்த மரபுசாரா ஆற்றல் பயன்பாடு, 2020ற்குள் 20% கடக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

போக்குவரத்துத் துறையில் மட்டும் கணக்கிட்டால், மரபுசாரா எரிசக்தி உற்பத்தி வழியிலான பயன்பாடு இன்னும் 10% அளவினை எட்டவில்லை.

ஐரோப்பிய நாடுகளில் மரபுசாரா உற்பத்தி மூலங்களில் காற்றாலை, சூரியக்கதிர் மற்றும் உயிரிஎரிசக்தி ஆகிய மூன்றுமே அதிக அளவிலான ஆற்றல் உற்பத்தியினை வழங்குகிறது.

2008ற்கும் 2018ற்கும் இடைப்பட்டக் காலத்தில், ஐரோப்பிய நாடுகள் 28ம் சேர்த்து சூரியக்கதிர் வழி மின்சார உற்பத்தியினை 7.5 TWh லிருந்து 127.8 TWh அதிகரித்துள்ளன. இருப்பினும், காற்றாலை மற்றும் நீராற்றல் மின்சார உற்பத்தி இந்த அளவுகோலைவிட பன்மடங்கு அதிகம்.

ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தக்கூடிய ஆற்றலில், 40% வீடுகள் மற்றும் நிறுவனக் கட்டங்களுக்கு குளிரூட்டப்படவும், வெப்பமாக்குவமே பயன்படுத்தப்படுகிறது. ஆகையால், ஏப்ரல் 2018இல் கூடிய ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்றத்தில், ஐரோப்பிய நாடுகளில் கட்டப்படும் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மரபுசாரா மின் உற்பத்திக் கொள்கைக்கு ஏற்றவாறும், காலநிலை மாற்றத்திற்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கை வடிவமைப்பிற்கு ஏற்றவாறும் பல ஆண்டுகளுக்கு நிலைக்க்கூடியத் தன்மையில் கட்டப்படுகிறதா எனபதை அந்தந்த நாடுகள் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

https://www.europarl.europa.eu/news/en/headlines/priorities/energy/20180328STO00750/energy-efficiency-new-eu-rules-for-buildings-and-homes

செப்டம்பர் 2018இல் புருஸ்ஸல்ஸ் நகரில் நடந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் காலநிலை கருத்தரங்கில் ஃபிரான்ஸ், பல்கேரியா மற்றும் கிரீஷ் நாடுகள் 2030ற்குள் தங்கள் மரபுசாரா மின்சார உற்பத்தியினை தற்பொழுதிய அளவுகோலில் இருந்து 2%-5% அதிகரிக்க உள்ளதாக வாக்குக் கொடுத்துள்ளன. ஐநாவின் காலநிலை கருத்தரங்கில், கிரீஷ் நாடு 2028ற்குள் மின்சார உற்பத்தியில் நிலக்கரி வழியினை முற்றிலும் நிறுத்த உத்தரவாதம் அளித்துள்ளது.

https://www.euractiv.com/section/energy-environment/news/three-eu-countries-bump-up-renewable-energy-goal-for-2030/

அதேபோல, ஐரோப்பிய ஒன்றியங்களின் இலக்கு குறித்தப் பயணத்தில், போலந்து, ஹங்கேரி மற்றும் செக் குடியரசு நாடுகள் தங்கள் நாட்டின் மரபுசாரா உற்பத்தி முறைக்கான செலவுகளில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தி இருக்கின்றன. போலாந்து நாட்டின் ஆற்றல் துறை அமைச்சர் கிறிஸ்டோஃப் முதலில் உறுதியாக வலியுறுத்த ஏனைய பழைய பொதுவுடமை நாடுகளும் அதற்கு ஆதரவான குரலினை பதிவு செய்துள்ளது.

இந்த விவாதங்களின் தொகுப்பில், போலந்து அணுசக்தி வழி மின்சார உற்பத்தியினை பெருக்கவும் அதன் வழி பசுமை இல்ல வாயுக்கள் உமிழ்வைத் தடுக்க முடியுமே எனவும் தெரிவிக்கையில், ஜெர்மன் அதற்கு கடும் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மரபுசாரா மின் உற்பத்திக்கான செலவுகளை ஒன்றிய நாடுகள் பங்கிக்கொள்வது குறித்த வழிகாட்டுதலில், ”அணுசக்தி வழி மின் உற்பத்தி பாதுகாப்பற்ற, நிலையற்ற, அதிகம் பொருட்செலவினை தரக்கூடியது எனவும், ஆகையால், அணுசக்தி வழி மின் உற்பத்தி பெருக்கத்திற்கு நாம் யாரும் துணை நின்றுவிடக்கூடாது” என்பதிலும் ஒன்றிய அமைச்சர்கள் உறுதியாக இருக்க வேண்டும் என ஜெர்மன் உறுதிபட எடுத்துரைத்துள்ளது.123

நோர்டிக் நாடுகளில் புள்ளிவிவரங்கள் என்ன சொல்கிறது?:

தன் நாட்டின் ஒட்டுமொத்த மின்சாரத் தேவைகளில் ஆஸ்திரிய நாடு மரபுசாரா மின் உற்பத்தி அளவினை 73% எட்டியுள்ள நிலையில், சுவீடன் 66%த்தையும் டென்மார்க் 62%த்தையும் எட்டியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியங்களில் இம்மூன்றுமே அதிக உற்பத்தியினை எட்டியுள்ளது. நோர்வே நாடு (ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லை) 98%த்தை மரபுசாரா உற்பத்தி மூலமாக எட்டியுள்ளது.

https://www.regjeringen.no/en/topics/energy/renewable-energy/renewable-energy-production-in-norway/id2343462/

நோர்டிக் நாடுகளில் முறையே நோர்வே, சுவீடன், டென்மார்க், ஃபின்லாந்து மற்றும் ஐஸ்லாந்து நாடுகள் மரபுசாரா மின் உற்பத்தியில் இடம் வகிக்கின்றன.

நோர்வே நாடு, காற்றாலை உற்பத்தியில் உலக அளவில் 7ஆம் பெரிய நாடாக திகழ்கிறது. 2018இல் காற்றாலை வழியாக 129 TWh ஆற்றலினை நோர்வே உற்பத்தி செய்துள்ளது, இது ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளின் சூரிய ஆற்றல் உற்பத்தியின் அளவுக்கு ஈடானது.

உலக நாடுகளின் முயற்சிகள்:

மரபுசாரா ஆற்றல்கள் மூலமாக மட்டுமே உலகின் தேவைகளில் மூன்றில் இரண்டு பங்கை உருவாக்கிக்கொள்ள முடியும் என்றும் அப்படி செய்யும்பட்சத்தில் இன்றிலிருந்து 2050ற்குள் உலகின் சராசரி தட்பவெட்ப உயர்வை 2 டிகிரி செல்சியஸிற்குள் கட்டுப்படுத்த வாய்ப்பு உள்ளதெனக் கணக்கிட்டுள்ளார்கள்.

https://www.irena.org/publications/2018/Feb/Renewable-energy-prospects-for-the-EU

இருப்பினும், புதுத்தொழிற்சாலை வாயுக்கள் உருவாக்கம் மற்றும் புதியக் கருவிகளின் பயன்பாடுகள் முறையான சுற்றுச்சூழல் தெளிவோடு தயாரிக்கப்பட்டு பயன்பாட்டிலும் இருக்கும் நிலையிலேயே இந்த மாற்றங்களுக்கு வாய்ப்புள்ளதென்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

இன்றையக் கணக்கீட்டின்படி, உலக நாடுகளின் மரபுசாரா எரிசக்தி உற்பத்தி, அடுத்த 5 ஆண்டுகளில் இன்றைய உற்பத்தி அளவில் 50% அதிகரிக்க வாய்ப்புள்ளது என பன்னாட்டு ஆற்றல் முகமையகம் (IEA) தெரிவித்துள்ளது.

அம் முகமையகத்தின் சமீபத்திய அறிக்கையின் படி, ”2024இல் சூரிய ஓளி வழியிலான ஆற்றல் உற்பத்தி உலக அரங்கில் 600GW அளவில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர். ஜப்பான் நாட்டின் ஒரு ஆண்டின் ஒட்டுமொத்த மின் உற்பத்தியின் அளவைவிட இரண்டு மடங்கு அதிகாமான அளவுகோல் இது.

இந்திய நிலைமை என்ன?

இப்படி உலக நாடுகள் ஒரு போக்கில் பயணிக்க, இந்திய ஒன்றியம் இதுவரை தன் கொள்கையிலும் செயற்பாட்டிலும் பெரிய மாற்றத்தினைக் கொண்டு வரவேயில்லை என நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்திய ஒன்றிய மின் உற்பத்தியில், நிலக்கரி: 203,954.5 MW (56.1%), அதிஉயர் நீராற்றல்: 45,399.22 MW (12.5%), சிறியவகை நீராற்றல் நிலையம்: 4,610.81 MW (1.3%), காற்றாலை : 36,930.32 MW (10.2%), சூரியக்கதிர் : 31,101.71 MW (8.6%), உயிரி எரிசக்தி : 9,271.3 MW (2.6%), அணு உலை : 6,780 MW (1.9%), வாயு: 24,937.22 MW (6.9%).

உலக நாடுகளின் மரபுசாரா உற்பத்தி குறித்தச் செயற்பாடுகள் மற்றும் கொள்கைப் பிரகடனங்கள் குறித்து நாம் தொடர்ச்சியாக எழுதுவதே இந்திய ஒன்றிய அரசுகளின் ஆற்றல் கொள்கையில் நல்லதொரு மாற்றத்தினை உருவாக்க முடியும் என்னும் நம்பிக்கையிலேயே.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இணைந்து, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றங்களுக்கு எதிரான போக்கினை கையாளுவது போல, இந்திய ஒன்றியத்திலும் கூட, மாநிலங்களின் கூட்டுக் கொள்கை வடிவமை மிக அவசியம்! பெரும் பிரச்சனைகள் அனைத்தும் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதின் மூலமே தீர்வினை எட்ட முடியும்!

தொடர்ந்து உரையாடுவோம், கருத்துக்களை பகிர்வோம். பூவுலகினை பூவுலகாக நம் குழந்தைகளுக்கு விட்டுச்செல்வோம்!

தொடர்புடடைய முந்தையக் கட்டுரைகள்:

1) போக்குவரத்துகளில் மரபுசாரா எரிசக்தி – உலகிற்கு வழிகாட்டும் நோர்வே

2) உலகை அச்சுறுத்தும் வெப்ப அலை – எதை நோக்கி செல்கிறது நவீன உலகம்?

3) மரபுசாரா மின் உற்பத்தி நன்மைகளும் உலகின் பார்வைகளும்

2 comments

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s