இந்தியப் பெருங்கடலும் அதன் அரசியல் மற்றும் பொருளாதார முக்கியத்துவமும்!

”HSBC World in Forecast 2050” வழங்கிய கணிப்பில், 2050இல் ஆசியாவின் 19 நாடுகளே உலகின் பொருளாதாரத்தை ஆளுகை செய்ய இருக்கிறது என்றும், 2017இல் வெளியான Price WaterHouse Coopers (PWC) அறிக்கையில், ”இந்தியா, சீனா, மலேசியா உள்ளிட்ட நாடுகளே இந்தியப் பெருங்கடலை நோக்கிய பொருளாதாரத்தில் ஆளுகை செலுத்தும்” எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அதேவேளை, அமெரிக்காவின் பசிபிக் இராணுவ கட்டுப்பாட்டு மையத்தினை, மே 2018இல் இந்தோ-பசிபிக் கட்டுப்பாட்டு மையமாக மாற்றி அமைத்து இந்தியப் பெருங்கடல் பகுதியினையும் தனது வலைக்குள் விழவைத்துள்ளதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

வருங்கால உலகின் பல்வேறு முடிவுகளை தீர்மானிக்க இருக்கும் நிகழ்வுகள் இந்தியப் பெருங்கடலினை மையமாகக் கொண்டவையே!

உலகமயமாக்கல் சூழலில், இனி அணிசேரா (Non-alignment) கொள்கை என்பது கிடையவே கிடையாது, பல்முனை அணி (multi-alignment and strategic autonomy) மட்டுமே!

அதேப்போன்று இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் கூறியதுபோல, ”No Permanent Enemies or Friends, Only Permanent Interests”.

இந்தக் கண்ணோட்டத்திலும் புரிதலிலுமே, இந்தியப் பெருங்கடல் நோக்கிய பன்னாட்டு அரசியல் கலவைச் சூழலில், தமிழ்நாடு தனக்கான அரசியல் பார்வையை ஆழப் புரிந்து வைத்திருப்பது மிக அவசியமாகிறது.

இந்தியப் பெருங்கடலின் பூகோள முக்கியத்துவத்தைத்தான் தன்னுடைய எல்லாவகையான அரசியல், பொருளாதார முக்கியத்துவத்திற்கும் இலங்கைத் தீவு பயன்படுத்திக் கொண்டு வருகிறது. அதேவேளை, இந்தியத் துணைக்கண்டத்தின் அங்கமாய் இருந்தும், இந்தியப் பெருங்கடலின் பெரும் தொடர்பை வரலாற்று ரீதியிலும் பூகோள ரீதியிலும் பெற்றிருந்தும், தமிழ்நாடு தன் வலிமையை உணராது நிற்கின்றது என்பதும் பெரும் வேதனையே!

”தமிழர் கடல்” என்று பெயரளவில் கூறுவதில் பெருமைப்படும் அளவுக்கு விஞ்ஞானபூர்வமாக ஒரு கடற் கொள்கையை வகுக்க முடியாத நிலையில் தமிழகம் இருப்பது வேதனைக்குரியது. சோழர்களின் கடற்பாய்ச்சலுக்கான சில வருடங்களையும், ஈழத் தமிழரின் கடல் எழுச்சிக்குரிய சில வருடங்களையும் தவிர ”தமிழர் கடல்” சார்ந்த வெளியுறவுக்கொள்கை தமிழகத்திலும் சரி ஈழத்திலும் சரி தமிழர் மையப்பட்டதாக வரலாற்றின் பெரும்பகுதியில் இருக்கவில்லை.

இந்தியப் பெருங்கடலின் வரலாற்றுத் தொடர்ச்சியையும் தொடர்பையும் வைத்திருக்கும் தமிழ்நாடு, இந்தியப் பெருங்கடலில் நடந்தேறும் பொருளாதார, அரசியல் மாற்றங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் அரசுகளின் ஆக்கிரமிப்புகள் குறித்து அறிந்துக்கொள்வது, தமிழ்நாட்டின் திடத்தன்மைக்கும் நிலைநிறுத்தல்களுக்கும் பலம் சேர்க்கும்.

இக்கட்டுரையின் நோக்கமே, தமிழ்நாடு இந்தியப் பெருங்கடலினைச் சுற்றி நடக்கும் எல்லா அரசியல், பொருளாதார, பூகோள நிகழ்வுகளின் பங்குதாரராய் நாம் மாற வேண்டும் என்பதனை வலியுறுத்துவதே! இந்தியத் துணைக்கண்டத்தில் நாம் இணைந்து நிற்பது கூட்டு பலத்திற்காகவே அன்றி, அடிமைசாசன முறையினால் அல்ல! முடிவை இந்திய நடுவண் அரசு எடுக்கும் முன், தமிழ்நாட்டின் குரலும் உரிமையும் சேர்த்து ஒலிக்கப்பட வேண்டும்.

 இந்தியப் பெருங்கடலின் பொருளாதார உலகம்:

மீன்வளம், தூரக்கடல் எண்ணெய் மற்றும் வாயு உற்பத்தி, கடல்சார் நிறுவனங்கள், கடல்சார் வணிகப் போக்குவரத்து, சுற்றுலா என இந்தியப் பெருங்கடலினை மையமாக கொண்டு இயங்கும் பொருளாதார உலகம் மிகப்பெரியது. (https://hcss.nl/sites/default/files/files/reports/HCSS_FI-13_09_10_Indian_Ocean.pdf).

மிகக்குறிப்பாக, இந்தியப் பெருங்கடலை மையமாகக் கொண்ட கடல்சார் வணிகப் போக்குவரத்தும், கடல் சார் எண்ணெய் உற்பத்தியும் அதி முக்கியத்துவம் வாய்ந்தவை.

உலகளவிலான வணிகத்தில் 90% கடல்சார் போக்குவரத்தின் மூலம் நிகழ்பவை. உலகளவில், வணிகக் கப்பல்கள் கரைச்சேரும் துறைமுகங்களில் 13 முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகங்கள் இந்தியப் பெருங்கடலை மையமாகக் கொண்டவை. இதன் பெரும் முக்கியத்துவத்தை இலங்கைத் தீவு மட்டுமே அறுவடை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Indian Ocean Trade movements

அடுத்ததாக, உலக உற்பத்தியைக் கணக்கிடும்பொழுது, இந்தியப் பெருங்கடலில் 40% தூரக்கடல் எண்ணெய் உற்பத்தி (offshore oil production) இருக்கப்போகிறது.

(https://www.cs.mcgill.ca/~rwest/wikispeedia/wpcd/wp/i/Indian_Ocean.htm).

தமிழக-இலங்கை இடையிலான கடற்பகுதியை மன்னார் படுகை மற்றும் காவிரிப் படுகை என வகைப்படுத்தியுள்ளனர். இதில், மன்னார் படுகை மட்டும் 30000 சதுர கி.மீ பரப்பளவில் 8 அகழ்வாராய்ச்சி வளாகங்களாகவும் வகைப்படுத்தியுள்ளனர். இலங்கை கச்சா எண்ணெய் துறையின் அளவுகோள்படி, கடலினுள் மையம் கொண்டிருக்கும் தடிமன் பாறைகளில், 60% கச்சா எண்ணெய் கிடைக்க வாய்ப்புள்ளதென அறிய முடிகிறது.  (http://www.prds-srilanka.com/pdfs/publication2.pdf ).

2001 லிருந்து 2003 வரை மன்னார் படுகையில் நோர்வே நாட்டைச் சேர்ந்த TGS-NOPEC நிறுவனமே எண்ணெய் மற்றும் வாயு தேடலுக்கான அகழ்வாராய்ச்சிகளை செய்தது. (http://www.gsslweb.org/home/files/9-12-Upul%20Premarathne-final.pdf). 2001-2003 காலக்கட்டம்தான் விடுதலைப்புலிகள் மற்றும் இலங்கை அரசுக்கு இடையிலான பேச்சுவார்த்தை நடந்த முக்கியமானதொரு காலமும் கூட.

அதேப்போன்று, இலங்கைக்கு வட மேற்கில் 20 கி.மீ வரை, அதாவது தமிழக கடல் பகுதிகளான வேதாரண்யம், கோடியக்கரை, அதிராம்பட்டிணத்தை உள்ளடக்கிய பகுதிகளுக்கும் இலங்கைக்கும் இடைப்பட்டப் பகுதிகளில், காவிரிப் படுகையை கிட்டத்தட்ட 20000 சதுர கி.மீ பரப்பளவை எண்ணெய் மற்றும் வாயு அகழ்வாராய்ச்சிகளுக்கென வரையறுத்துள்ளார்கள். (http://www.prds-srilanka.com/exploration/cauveryBasin.faces).Oil basins around Srilanka

2018 இல், யாழ்ப்பாணம் முதல் மட்டக்களப்பு வரையிலான பகுதிகளில், அமெரிக்கா நிறுவனமான Schlumberger, எண்ணெய் மற்றும் வாயு தேடலுக்கான அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டது. தூரக்கடல் அகழ்வாராய்ச்சிகளுக்கென சீனாவின் கப்பல் நிறுவனத்தை வாடகைக்கு அமர்த்தியே அமெரிக்க நிறுவனம் இதனை செய்தது. தமிழர் தரப்பைப் பொறுத்தவரை சீனர்களும் சீன நிறுவனமே இவ்வேலையைச் செய்தனர் எனவும் நம்பினர். (https://www.tamilnet.com/art.html?catid=79&artid=39185).

மேலே கூறிய எண்ணெய் வளம் சார்ந்த அனைத்து தேடுதலும் அகழ்வும் தமிழர் தாயகப் பகுதிகளில் நிகழ்பவை என்பதும், தமிழீழ விடுதலைப் புலிகளை அகற்றியப் பிறகே அனைத்தையும் இலங்கை அரசும் பன்னாட்டு நிறுவனங்களும் நடத்தி வருகின்றன என்பதனையும் மறந்துவிடக்கூடாது.

இலங்கைத் தீவை ஒட்டிய கடல் பகுதிகளில் இனி அடுத்தடுத்து எண்ணெய் மற்றும் வாயு அகழ்வாராய்ச்சி மற்றும் உற்பத்திகளில் பன்னாட்டு நிறுவனங்கள் களம் இறங்கும். புதிய படுகைகளை கைப்பற்றுவதும் ஆக்கிரமிப்பதும் பன்னாட்டு நிறுவனங்கள், அரசுகளின் மூலம் நடக்கும். இலங்கை போன்ற பூகோள முக்கியத்துவம் வாய்ந்தத் தீவுகள் அதனை முழுமையாக அறுவடை செய்யவும் காத்திருக்கிறது. இதுக்குறித்து ஏற்கனவே எழுதபட்டக் கட்டுரையில் தெரிவித்துள்ளேன்.சிங்களத் தேசம் கைப்பற்றத் துடிக்கும் குமரிக்கண்டத்தின் கடல் பரப்பு!

இந்தியப் பெருங்கடலில் அரசியல் மற்றும் இராணுவ முக்கியத்துவம்:

இந்தியப்பெருங்கடலை மையப்படுத்தி பல ஆண்டுகளாகவே இராணுவ மேகங்களை பன்னாட்டு வலைப்பின்னல்கள் பல்வேறு காலக்கட்டங்களில் சுழலவிட்டுள்ளன என்ற பொழுதிலும், சமீபத்திய இராணுவ உடன்படிக்கைகளும் ஒப்பந்தங்களும் வருங்கால பூகோள அரசியலை தெளிவுப்படுத்தும். ஆதலால், மிகச்சமீபத்திய மாற்றங்கள் மற்றும் நிகழ்ச்சி நிரல்களை மட்டும் பார்ப்போம்.

இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக்கொண்டு இருக்கும் சூழலில் (Dec 2018) இலங்கையின் துறைமுகங்களில் இந்தியா-ரசியா-அமெரிக்கா இராணுவக் கப்பல்கள் நங்கூரம் இட்டுச் சென்றுள்ளது.

மூன்று மாதங்களுக்கு முன்னர், இந்தியா-ஜப்பான்-அமெரிக்க இராணுவக் கப்பல்கள் ஒத்திகைக்காக தமிழீழத் துறைமுகமான திருகோணமலையில் தங்கிச்சென்றன. இணைப் பயிற்சிகள் வழங்குதல் மற்றும் கடற்படைக் கலங்களை அன்பளிப்பாக வழங்குதல் என்று அமெரிக்காவும் ஜப்பானும் இந்தியாவும் திருகோணமலையை மையப்படுத்தி, இலங்கைக் கடற்படையை வலுப்படுத்துவதில் மிகுந்த ஈடுபாடு காட்டிவருகின்றன. சீனாவின் நீர்மூழ்கி கப்பல் கொழும்பு வந்து நின்று சென்ற நேரத்தில் இருந்த ஊடக கவனம் கூட, அமெரிக்க நாட்டின் முன்னெடுப்பில் தொடர்ந்து நடக்கும் இராணுவ ஒத்திகை மற்றும் கூட்டுப் பயிற்சிகளின் பொழுது இருந்ததில்லை.india-us-vow-to-work-together-for-advancing-free-open-indo-pacific

நவம்பர் 2018இல் அர்ஜெண்டினாவில் நடந்த G20 மாநாட்டில், ஜப்பான், அமெரிக்கா, இந்தியா மூன்றும் இணைந்து இந்தோ-பசிபிக் பிராந்திய கடல்சார் பாதுகாப்பு, வணிகம், பேரழிவு மேலாண்மை மற்றும் ஒத்துழைப்பு என்பவற்றை எல்லாம் குறித்து விவாதித்து ’JAI’ என்னும் கூட்டு புரிந்துணர்வை வரையறுத்துள்ளனர்.

(https://www.tamilnet.com/art.html?catid=79&artid=39272).

ரசியாவின் இராணுவத் தொழிற்நுட்பத்தில் தங்கியிருக்கும் இந்திய இராணுவக் கட்டுமானங்களை படிப்படியாக குறைத்து, அமெரிக்க இராணுவத் தொழிநுட்பத்தை வழங்குவதன்மூலம் தனது அரவணைப்புக்குள் கொண்டுவந்து, ஈரானிடமிருந்தும் ரசியாவிடமிருந்தும் இராணுவ மற்றும் பொருளாதார கொடுக்கல் வாங்கல்களில் இருந்து இந்தியாவைத் தந்திரமாகப் பிரித்தெடுத்து, நேட்டோவின் (NATO) அறிவிக்கப்படாத உறுப்பினராக மாற்றி, மாயவலைக்குள் இந்தியாவைக் கொண்டுவருவது அமெரிக்காவின் இராணுவ வியூகம்.

இவர்கள் நடத்தும் அரசியல் சூதாட்டங்களுக்கான இரைதான் இலங்கைத்தீவின் தமிழர் அரசியல்.

2015 ஆம் ஆண்டு மே மாதம், கொழும்புவில் உள்ள தாஜ் கோரமண்டல் வளாகத்தில் நடந்த அரசியல் சந்திப்பொன்றில், ஐக்கிய அமெரிக்கா அரசுகளின் அரச செயலாளர் ஜான் கெர்ரி (Secretary of States, USA) அவர்கள் பேசியப் பேச்சில், பூகோள முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீவில் அமெரிக்க ஐக்கிய அரசுகள் மைத்திரி-ரணில் கூட்டாட்சியை ஆதரிப்பதோடு (இணைப்பையும் ஆட்சி மாற்றத்தையும் திரைமறைவில் உருவாக்கியதும்), இந்தியப் பெருங்கடலிலும் அதற்கும் அப்பாற்பட்ட இந்தோ-பசிபிக் கடல் மண்டலத்திலும், அமெரிக்கா-இலங்கை அரசுகள் அரசியல்-பொருளாதார-இராணுவ நோக்கில் ஒன்றிணைவது அவசியம் என்று உரைத்திருந்தார். (https://2009-2017.state.gov/secretary/remarks/2015/05/241421.htm)

விடுதலைப்புலிகளை தமிழ் மண்ணில் இருந்து அப்புறப்படுத்துவதில் தொடங்கி, தமிழின அழிப்பு, ராஜபக்சேவை பாதுகாத்தல், ஆட்சி மாற்றம் மூலம் தமிழர் அரசியலை திசைத் திருப்பியதில் என பல்வேறு நிலைகளிலும் பன்னாட்டு அரசுகள் செய்த சதி வேலைகளுக்கு அமெரிக்காவின் தலைமையும் வழிக்காட்டுதலும் இருந்தது.

ஈழத்தமிழர்கள் மீது இன அழிப்புப் போர் செய்து அழித்த பின்னர், அனுபவம் பெற்ற முப்படை ஒன்று தன்னிடம் இருப்பதைச் சுட்டிக்காட்டி, இலங்கைத் தீவின் பூகோள முக்கியத்துவம் கருதி கடற்படையை மேலும் நவீனமயப்படுத்தி, இந்தியப் பெருங்கடலில் இலங்கைத் தீவை வெளிச்சக்திகளுக்கான ஒரு இராணுவத் தளமாக மாற்றி, இந்தியாவோடு ஏதோ ஒரு வகையில் தன்னையும் சமமான நிலையில் இருந்து பேரம் பேசும் சக்தியாக மாற்றிக் கொள்ளவேண்டும் என்ற கடல் வெளியுறவுக் கொள்கையையே ரணிலும் ராஜபக்சேவும் தொடர்ந்து வலியுறுத்திவந்திருக்கிறார்கள்.

கொழும்பில் 2017இல், வியட்நாமில் 2018இல் நடந்த ’இந்தியப் பெருங்கடல்’ கருத்தரங்கில் இலங்கையின் பிரதமர் விக்கிரமசிங்கே, ”இலங்கை, சீனாவுடன் பொருளாதார ஒப்பந்தங்களைத் தவிர வேறு எதனிலும் ஈடுபடாது, இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக எதனையுமே செய்யமாட்டோம்” என்றுத் தெரிவித்திருந்தார். ஆனால், அதேவேளை, தென்கிழக்கு ஆசியாவின் முதல் இராணுவக் கட்டளை மையம் இலங்கையிலேயே இருந்தது என்றும் அமெரிக்காவினது சிந்தனை ஒப்புதல் மீதான பாராட்டுக்களையும் குறிப்பிடத் தவறவில்லை.1.(https://www.colombotelegraph.com/index.php/indian-ocean-sri-lankas-role-in-determining-the-future-of-the-world/ 2. https://www.koormai.com/pathivu.html?vakai=4&therivu=295)a4012bc725ae269b43a3fc27218fad3f_XL

இந்தச் சூழ்நிலையில்தான் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் இணைந்து இந்தோ-பசிபிக் கட்டளை மையத்தின் செயற்பாட்டினில், பூகோள முக்கியத்துவம் வாய்ந்த இலங்கைத் தீவினையும் தங்கள் கைப்பாவையாக உள்ளடக்கி வளர்த்து வருகிறார்கள்.

இதில் இந்தியாவிற்கு வேறு வழியில்லாத நிலையில் அமெரிக்கா மற்றும் அதன் இந்தோ-பசிபிக் கட்டளை மையத்தின் அங்கமாக மாறி கைக்கட்டி நிற்கிறது. ஆனால், இலங்கை தனது பூகோள முக்கியத்துவத்தை முற்றிலுமாக உணர்ந்து, தன்னை இந்தியாவிற்கு சமமான வலு சக்தியாக நின்று ஏறி மிதித்து வருகிறது.

அதேவேளை, இலங்கையின் ஆட்சியாளர்கள், ராஜபக்சேவோ ரணிலோ சீனாவை எதிரியாக்க மாட்டார்கள். ஏன், இந்தியாவும் கூட இராணுவ ஒப்பந்தங்கள், ’2+2 கூட்டம்’, இந்தோ-பசிபிக் இராணுவ கட்டளை மைய செயல்பாட்டில் அணி சேர்தல், என தொடர்ந்து தனது இராணுவ, அரசியல் முக்கியத்துவத்தை அமெரிக்கச் சார்போடு நடத்திக்கொண்டே, சீனா, ரசியாவோடு பல்வேறு நிலை பேச்சுவார்த்தைகளையும் ஒத்துழைப்புகளையும் ஒப்பந்தங்களையும் மேம்படுத்திக்கொண்டேதான் இருக்கிறது.

பொருளாதர நலன் சார்ந்த பூகோள அரசியலும் இராணுவ ஒருங்கிணைப்புச் சார்ந்த பூகோள அரசியலும் வெவ்வேறு வழித்தடங்களில், புதிய பரிணாமங்களில் பயணிக்கத் தொடங்கிய ஆண்டாகவே 2018 நின்றது. இந்த புதிய பரிணாமத்திலேயே இனிவரும் உலகம் நடைபோட இருக்கிறது என்பதனை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

தமிழகத்தின் வருங்காலமும் வெளியுறவுக் கொள்கையும்

பூகோள அரசியலில் தமிழ் நாட்டில் உள்ள சென்னைத் துறைமுகமோ அல்லது இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் உள்ள துறைமுகமோ இந்த நாடுகளுக்கு முக்கியமானதாக இல்லை.

ஆகவேதான் தமிழக அரசு தமக்கென வெளியுறவுக் கொள்கை ஒன்றை வகுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. தமிழகத்தில் சோழர் காலத்தின் பின்னரான அரசியல் சூழலில் தமிழகத்துக்கென தனியானதொரு வெளியுறவுக் கொள்கை இதுவரை வகுக்கப்படவில்லை.

இந்தியாவின் ஒற்றையாட்சித் தன்மை கொண்ட முறையற்ற கூட்டாட்சி முறையில் மாநில அரசுகள் வெளியுறவுக் கொள்கையை வகுக்க முடியாது.

கடல் சார்ந்த பொருளாதாரமும், இராணுவ நடவடிக்கைகளும் அரசியலும் முக்கியத்துவம் வாய்ந்திருக்கும் இன்றையச் சூழலில், மாநில அரசுகள் அடிமை அரசுகளாக இல்லாமல் கொள்கை முடிவுகளில் பங்கெடுக்கும் சமத்துவ ஆட்சி வலிமை மாநில அரசுகளுக்கு வேண்டும்.

இது நடைமுறை சாத்தியமா என சிலர் நினைக்கலாம். மாநில சுயாட்சி, தன்னாட்சிகள் பற்றி பேசிக்கொண்டிருக்கும் சூழலில் இது போன்ற விவாதத்தையாவது கிளப்ப வேண்டியுள்ளது. நாம் பங்குக்கொண்டிருக்கும் இந்தியப் பெருங்கடல் பகுதியினை விட குறைவான இடத்தைச் சுமந்து நிற்கும் இலங்கை தனது எல்லா சூட்சமங்களையும் பயன்படுத்தி நவீன உலகில் மிளிர்ந்து வரும் வேளையில், தமிழகத்தைச் சுற்று நடக்கும் அரசியல் ஆட்டங்களில் தமிழகத்தின் குரல் இல்லாமலே நடந்துவருவது வருங்காலங்களில் நம்மை இன்னும் வலிமை இழக்கவேச் செய்யும்.

ஒவ்வொரு தேசங்களும் அரசுகளும் அடுத்த 25-50 ஆண்டுகளுக்கான தூரப்பார்வைக் கொண்டே தங்கள் அரசியல் நகர்வுகளை சிந்திக்கும். தமிழ்நாடு, இந்தியத் துணைக்கண்டத்தினுள் அரசியல் உறுப்பினராக இருக்கின்றபொழுதிலும், இந்தியா என்னும் ஒற்றையாட்சிக்குள் அடங்கி நிற்கும் மாகாணமாக இயங்கவில்லை. இந்திய ஒன்றியத்தின் கூட்டு வலிமை கொண்ட மாநில ’அரசு’ என்ற அரசியல் பலம் கொண்டு இயங்குகிறது.  இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்களுமே ’அரசுகள்’ தான். எல்லோரும் இணைந்தே இந்தியா என்னும் ஒன்றியத்தினை சுமக்கிறோம்.

அரசுக்குரிய வலிமையை கூட்டாட்சி முறையில் திடமாக உறுதிப்படுத்துவது ஒன்றே தமிழ்நாட்டை நீண்ட காலம் நிலைத்து வைத்திருக்க உதவும். அதன் ஒரு கோணமே, இந்திய ஒன்றியத்தின் இந்தியப் பெருங்கடல் அரசியலில் தமிழ்நாட்டின் ’குரல்’ வேண்டும் என்ற உரிமை முழக்கம்.

 

7 comments

  1. எப்படியாவது தமிழ்மக்களுக்குத்தமின ஒற்றுமை\ஐ உருவாக்க இத்தகையகட்டுரைகள் உதவும். தொடரட்டும் உங்கட்பணி.

  2. […] தொகுத்து வழங்குகிறது. அதோடு, 1) இந்தியப் பெருங்கடலும் அதன் அரசியல் ம… 2) சிங்களத் தேசம் கைப்பற்றத் […]

  3. […] தொகுத்து வழங்குகிறது. அதோடு, 1) இந்தியப் பெருங்கடலும் அதன் அரசியல் ம… 2) சிங்களத் தேசம் கைப்பற்றத் […]

  4. […] இவைகளுக்கு அடுத்தடுத்தக் காட்சிகள் குறித்தும், தமிழர் கடலினில் நிகழ்ந்த 3 ஆண்டுகள் அரசியல், இராணுவ, பொருளாதார நடவடிக்கைகள் குறித்தும் இக்கட்டுரையாளர் எழுதிய ”இந்தியப் பெருங்கடலும் அதன் அரசியல் பொருளாதார முக்கியத்துவம்” கட்டுரை விரிவாக பேசுகிறது. இந்தியப் பெருங்கடலும் அதன் அரசியல் ம… […]

  5. […] இவைகளுக்கு அடுத்தடுத்தக் காட்சிகள் குறித்தும், தமிழர் கடலினில் நிகழ்ந்த 3 ஆண்டுகள் அரசியல், இராணுவ, பொருளாதார நடவடிக்கைகள் குறித்தும் இக்கட்டுரையாளர் எழுதிய ”இந்தியப் பெருங்கடலும் அதன் அரசியல் பொருளாதார முக்கியத்துவம்” கட்டுரை விரிவாக பேசுகிறது. இந்தியப் பெருங்கடலும் அதன் அரசியல் ம… […]

  6. […] இவைகளுக்கு அடுத்தடுத்தக் காட்சிகள் குறித்தும், தமிழர் கடலினில் நிகழ்ந்த 3 ஆண்டுகள் அரசியல், இராணுவ, பொருளாதார நடவடிக்கைகள் குறித்தும் இக்கட்டுரையாளர் எழுதிய ”இந்தியப் பெருங்கடலும் அதன் அரசியல் பொருளாதார முக்கியத்துவம்” கட்டுரை விரிவாக பேசுகிறது. இந்தியப் பெருங்கடலும் அதன் அரசியல் ம… […]

பின்னூட்டமொன்றை இடுக